புதுச்சேரி: வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முனுசாமி 1967இல் பிறந்தார். இவர் தனது 10 வயதிலேயே மண்பாண்டம் தொழிலை தனது தந்தையுடன் செய்ய தொடங்கினார்.
ஏறத்தாழ 40 ஆண்டுகளாக மண்பாண்டத் தொழிலை செய்து வரும் இவர், உருவாக்கிய மண்பாண்ட பொருள்கள் புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
பல நாடுகளுக்குப் பயணப்பட்டவர்
புதுச்சேரியில் புகையிலை அடுப்புகளை உருவாக்கி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்து அதற்கான விருதுகளையும் பெற்றவர். ஸ்பெயின், பிரான்ஸ், ருமேனியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மண்ணில் எப்படி சிலை செய்வது என்று அங்கு உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. கரோனா காரணமாக விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நவ. 8ஆம் தேதி நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர், வி.கே. முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தார். விருது பெற்ற பின் இன்று (நவ. 10) புதுச்சேரி திரும்பிய முனுசாமிக்கு வில்லியனூர் பகுதி மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்த பத்மஸ்ரீ வி.கே.முனுசாமி 20 தலைமுறைக்கு மேலான பாரம்பரியம்
பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "புதுச்சேரி வில்லியனூரில் பிறந்தேன். எட்டாவது வரை படித்த நான் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன்.
எனது தந்தையிடம் இருந்து இத்தொழிலை கற்றுக்கொண்டேன். அதன் பிறகு புதுச்சேரி மாவட்ட தொழில் மையம் சார்பாக இத்தொழிலை தொடர்ந்து செய்து வந்தேன்.
எங்கள் தொழிலில் இருந்தவர்கள் இதை விட்டுவிட்டு வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். ஆனால், நம்பிக்கையுடன் இந்த தொழிலை நான் தொடர்ந்து செய்து வருகிறேன்.
கைவினைத் தொழில் செழிக்க வேண்டும்
குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்மஸ்ரீ விருது பெறும்போது, மண்பாண்டத் தொழிலுக்கே பெருமை சேர்த்ததாக மகிழ்ச்சி அடைந்தேன். இந்த விருது என்னை மென்மேலும் ஊக்குவிக்கும். மண்பாண்டத் தொழில் நலிந்து வருவதால் என்னை போன்ற கைவினைக் கலைஞர்கள் பலர் தொழிலில் இருந்து வெளியேறுகின்றனர். எனவே, அரசு கைவினைக் கலைகளை ஐந்தாம் வகுப்பிலிருந்து பள்ளியில் பாடமாக கொண்டு வரவேண்டும்.
கைவினைக் கலைஞர்கள், தொழிலில் அனுபவம் வாய்ந்தவர்களை கவுரவ ஆசிரியர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்க வேண்டும். இதன்மூலம், கலைஞர்களின் வாழ்வாதாரமும் உயரும், கலைகள் அழிந்து போகாமல் மேலும் வளரும்" என்றார்.
இதையும் படிங்க: தெருவிலிருந்து பத்மஸ்ரீ வரை - ரணங்களை வெற்றியாக்கிய சாதனை திருநங்கை மஞ்சம்மா ஜோகதி