ஹைதராபாத்: 2022ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. இரண்டு நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்த நிலையில், 2022ஆம் ஆண்டில் நாட்டையே உலுக்கிய முக்கியமான குற்றச் சம்பவங்களை திரும்பிப் பார்ப்போம். இந்த குற்ற சம்பவங்களில் அப்பாவிகளின் கொடூர கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் அடங்கும். இந்த குற்றச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொலை :டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா வாக்கரை, அவரது காதலன் அஃப்தாப் அமீன் கொலை செய்து 35 துண்டுகளாக கூறுபோட்டு, வனப்பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் வீசினார். துண்டு துண்டாக வெட்டிய உடலை புதிதாக ஃபிரிட்ஜ் வாங்கி சேமித்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தியுள்ளார், அஃப்தாப். மகளைக் காணவில்லை என ஷ்ரத்தாவின் தந்தை போலீசில் புகார் அளித்த நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இந்த கொலை நடந்துள்ளது. திருமணம் செய்து கொள்ளும்படி ஷ்ரத்தா வற்புறுத்தியதன் காரணமாகவே கொலை செய்யப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் பரபரப்பு செய்தியாக மாறிய நிலையில், இதைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் இதே பாணியில் பல்வேறு கொலைச் சம்பவங்கள் அரங்கேறின.
கேரள நரபலி சம்பவம்:கேரளாவில் விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் மூட நம்பிக்கையில் மூழ்கிப்போன ஒரு தம்பதி, இரண்டு பெண்களை நரபலி கொடுத்தனர். மாந்திரீகத்தில் நம்பிக்கை கொண்ட பகவல் சிங் - லைலா தம்பதி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டனர். இவர்களது மூட நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்ட, பாலியல் வக்கிர எண்ணம் கொண்ட முகமது ஷபி என்ற நபர் சாமியார் போல நடித்து நரபலி கொடுத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ரோஸ்லின், தமிழகத்தைச் சேர்ந்த பத்மா ஆகிய இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டனர். உடல் உறுப்புகளை வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். பிறகு உடலை வீட்டின் பின்னால் புதைத்தனர். இதில் தம்பதி நர மாமிசம் சாப்பிட்டதாகவும் தெரிகிறது. இந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது.
உதய்பூர் கன்ஹையா கொலை:ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், கடந்த ஜூன் மாதம் பட்டப்பகலில் தையல்காரரான கன்ஹையா லாலை, இரண்டு இளைஞர்கள் தலையினை துண்டித்துக் கொலை செய்தனர். நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக கன்ஹையா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கொலை செய்ததோடு எச்சரிக்கை விடும் வகையில் வீடியோவையும் அந்த இளைஞர்கள் வெளியிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொலை செய்த முகமது ரியாஸ், கவுஸ் முகமது உள்ளிட்டப் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
சித்து மூஸ்வாலா சுட்டுக் கொலை:காங்கிரஸ் பிரமுகரும், பிரபல பஞ்சாபி பாடகருமான சித்து மூஸ்வாலா (28) கடந்த மே மாதம் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சித்து மூஸ்வாலா உள்பட 400-க்கும் மேற்பட்ட விஐபி-களுக்கான போலீஸ் பாதுகாப்பை பஞ்சாப் அரசு வாபஸ் பெற்ற அடுத்த நாள் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
கேங்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த கேங்ஸ்டர் கோல்டி ப்ரார், இந்தக் கொலைக்கு பொறுப்பேற்றார். கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு தப்பிச்சென்ற கோல்டி பிரார், கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேங்ஸ்டர் கும்பல்களுக்கு இடையிலான மோதல் காரணமாகவே பாடகர் சித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இளைஞர் அகாலி தலைவர் மிதுகேரா 2021-ல் கொல்லப்பட்டார். இந்த கொலையில் மூஸ்வாலாவின் மேலாளர் என்று கூறப்படும் ஷகன்ப்ரீத் சிங்கிற்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சோனாலி போகத் சந்தேக மரணம்:ஹரியானாவைச் சேர்ந்த நடிகையும், பாஜக பிரமுகருமான சோனாலி போகத்(43) கடந்த ஆகஸ்ட் மாதம், கோவாவில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். சோனாலி போகத்தின் உதவியாளர்கள் சுதிர் சங்வான், சுக்விந்தர் சிங் இருவரும் அவருக்கு அதிகளவு போதைப்பொருளை கட்டாயப்படுத்தி கொடுத்ததாக தெரிகிறது. அவர் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.