டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஊழியர் இறப்புக் காப்பீட்டுத் தொகையை ஏழுலட்ச ரூபாயாக உயர்த்தி இருக்கிறது.
நாட்டில் கோவிட்-19 தொற்று மரணங்கள் உயர்ந்து கொண்டே போய்க் கொண்டிருப்பதை மனதில் இருத்திக் கொண்டு, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (ஈபிஎஃப்ஓ) ஊழியர்களின் வைப்புசார் காப்பீட்டுத் திட்டத்தின் (ஈடிஎல்ஐ) கீழ் ஊழியர்களுக்கான இறப்புக் காப்பீட்டுத் தொகையின் அதிகபட்ச விகிதத்தையும், குறைந்த பட்ச விகிதத்தையும் உயர்த்தி உள்ளது.
சமீபத்தில் அரசு இதழில் (கெஜட்டில்) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தச் சேமநல நிதி ஊழியர்களுக்கான குறைந்தபட்ச இறப்புக் காப்பீட்டுத் தொகை 2.5 லட்ச ரூபாயாகவும், அதிகபட்ச இறப்புக் காப்பீட்டுத் தொகை ஏழு லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய தொகை விகிதங்கள் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என்று அரசாணைச் செய்தி சொல்கிறது.
ஊழியர்களின் வைப்புசார் காப்பீட்டுத் திட்டம் (ஈடிஎல்ஐ) என்றால் என்ன?
மத்திய அரசாங்கம் 1976ஆம் ஆண்டில் ஊழியர்களின் வைப்புசார் காப்பீட்டுத் திட்டத்தை (ஈடிஎல்ஐ) அறிமுகப்படுத்தியது. தனியார்துறை ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்னும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் எல்லா ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில், ஊழியர்கள் தங்கள் பங்கிற்கு பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் முதலாளிகள் குறிப்பிட்ட ஒரு தொகையைச் செலுத்த வேண்டும்.
ஒரு நிறுவனம் ஈடிஎல்ஐயை விடச் சிறந்த வேறொரு காப்பீட்டு நிறுவனத் திட்டத்தில் தனது ஊழியர்களைக் கொண்டு சேர்த்து விட்டால், அது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் இறப்புக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று தொழிலாளர் வருங்கால வைப்புநிதிச் சட்டம் - 1952 சொல்கிறது.