டெல்லி: மணிப்பூரில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுபாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதி ஜே.பி.பர்திவாலா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் விமானம் மூலம் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் எனவும், மோரே பகுதியில் உணவு இல்லாமல் பொதுமக்கள் உள்ளனர். தடுப்புகள் அகற்ற ஆயுத படையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். எனவே உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை விமான போக்குவரத்து மூலமாக கொண்டு செல்வது முக்கியமானது என தெரிவித்தார்.
நீதிமன்றம் நியமித்த குழுவின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, சில முகாம்களில் அம்மை நோய் மற்றும் சிக்கன் குனியா காய்ச்சல் பரவி வருவதாகவும் நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் இருப்பதால் அவர்களுக்கான மருந்து கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, இதனை மத்திய, மாநில அரசிடம் ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.