டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதாவுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.
18வது ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று (செப். 11) ஜி20 உச்சி மாநாட்டின் 2வது நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தலைநகர் டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலில் தன் மனைவி அக்ஷதாவுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். இங்கிலாந்து பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தியாவில் தங்கியிருக்கும் போது, ஒரு கோயிலுக்குச் செல்ல நேரம் கிடைக்கும் நம்பியதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், ஜி20 மாநாட்டை மகத்தான வெற்றியடையச் செய்ய அவருக்கு ஆதரவளிக்க ஆர்வமாக உள்ளதாகவும் ரிஷி சுன்க கூறினார்
தான் ஒரு இந்து என்பதில் பெருமை கொள்வதாகவும், அப்படித்தான் தான் வளர்க்கப்பட்டதாகவும் வாழ்ந்து வருவதாகவும் ரிஷி சுனக் கூறினார். அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தியாவில் உள்ள கோயிலை சுற்றிப் பார்க்க விரும்பியதாக தெரிவத்தார். மேலும், தான் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடியதாகவும் சகோதரி மற்றும் உறவினர்களிடம் இருந்து பெற்ற ராக்கிகளை பத்திரப்படுத்தி உள்ளதாகும் ரிஷி சுனக் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரிஷி சுனக் அதன் பிறகு முதல் முறையாக இந்தியா வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பருவநிலை மாற்றத் தடுப்பிற்கான கோபன்ஹேகன் ஒப்பந்தத்தில் உள்ள 194 நாடுகளால் நிறுவப்பட்ட பசுமை காலநிலை நிதியத்திற்கு, 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்குதாக ரிஷி சுன்க அறிவித்து உள்ளார்.
இதையும் படிங்க :ஜி20 விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின்.. அமெரிக்க அதிபருடன் கலந்துரையாடல்!