டெல்லி : வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில் முறைகேடு செய்ததாக பிபிசி இந்தியா நிறுவனத்தின் மீது அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. பிரிட்டனை தலைமை இடமாக கொண்டு பல்வேறு நாடுகளில் பிபிசி செய்தி நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்தியாவில் தலைநகர் டெல்லியை பிரதானமாக கொண்டு பிபிசி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. அண்மையில் 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்த ஆவணப் படத்தை "இந்தியா : மோடியின் கேள்விகள்" என்ற தலைப்பில் வெளியிட்டது. நேரடியாக இந்த ஆவணப் படம் வெளியாகவிட்டாலும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டது.
இந்த ஆவணப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது மோடியின் அலட்சியப் போக்கு இருந்ததாக அந்த ஆவணப் படம் பிரதிபலித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆவணப்படத்தை பொது வெளியில் திரையிட தடை விதிக்கப்பட்டது. ட்விட்டரில் பிபிசி நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட ட்வீட்டுகளும் அழிக்கப்பட்டன.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பிபிசி ஆவணப்படத்தை தடை செய்தது. மேலும் தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஆவணப் படம் திரையிடப்பட்டது. இதனால் கல்வி நிலையங்களில் கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.