மும்பை : அந்நிய செலாவணி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு முதலீடுகளில் மோசடி செய்து அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான நிலையில், அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்தி வருவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இருப்பினும், என்ன காரணத்திற்காக அனில் அம்பானி மீது அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது என்பது குறித்து அதிகாரிகள் கூற மறுத்துவிட்டனர். முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூஉர் உள்ளிட்டோர் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இரண்டு சுவிஸ் வங்கிக் கணக்கில் 814 கோடி ரூபாய் பணத்தை மறைத்து 420 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாக கூறி கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதனிடையே வருமானத் துறையின் நோட்டீஸ் மற்றும் அபராத கோரிக்கைக்கு இடைக்கால தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இந்த 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகாரில் அனில் அம்பானிக்கு இடைக்கால நிவாரணம் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக அனில் அம்பானி மீது 2022 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை எந்தவிதமான கட்டாய நடவடிக்கைகளும் எடுக்க வேண்டாம் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இரண்டு சுவிஸ் வங்கிக் கணக்குகளில் உள்ள தொகையை வெளியிடாததற்காக அனில் அம்பானிக்கு எதிராக வருமான வரித்துறை அதிகாரிகள் வழங்கிய நோட்டீசுக்கும் மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து அனில் அம்பானி தனது வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்களை அதிகாரிகளிடம் வேண்டுமென்றே தெரிவிக்கவிக்காமல் வரி ஏய்ப்பு செய்ததாக தெரிவித்த வருமான வரித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக, அறிக்கை அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இதையும் படிங்க :பெங்களூரில் ஜூலை 17, 18ல் எதிர்க்கட்சிகள் அலோசனைக் கூட்டம்... கே.சி.வேணுகோபால் திட்டவட்டம்!