டெல்லி: சீன நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் ஜியோமி இந்தியா நிறுவனத்தின் ரூ.5,551 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஜியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் ரூ.5551 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை சார்பில் இன்று (ஏப்ரல் 30) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜியேமி இந்தியா நிறுவனம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அந்நிறுவத்திற்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஜியேமி கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் தனது நிறுவனத்தை தொடங்கியது. அதன்பின்னர் அடுத்த ஆண்டு முதல் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இந்திய ரூபாயின்படி 5,551.27 கோடி ரூபாயை ராயல்டி என்ற பெயரில் ஜியேமி குழும நிறுவனம் உள்பட மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளது. ராயல்டி என்ற பெயரில் இவ்வளவு பெரிய தொகை தலைமை நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.