பாஜக உன்னாவ் தொகுதி எம்பி சாக்ஷி மஹராஜ் தனது சர்ச்சைக் கருத்துக்களுக்குப் பெயர்போனவர். அந்த வகையில் ”பாகிஸ்தானைவிட அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் இந்தியாவில்தான் உள்ளனர், எனவே இந்தியாவில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறுபான்மையினர் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்” என சர்ச்சைக் கருத்தை மீண்டும் முன்வைத்துள்ளார்.
உன்னாவ் மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு நேற்று (டிச.19) பேசிய அவர், இஸ்லாமியர்கள் இனி தங்களை இந்துக்களின் இளம் சகோதரர்களாக எண்ணி இந்த நாட்டில் வாழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்துப் பேசிய அவர், அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வகையில் விரைவில்நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தைப் பெற்றவர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அவர், மத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், விவசாயிகளின் தோள்களில் அமர்ந்து துப்பாக்கிகளால் சுடுவதைத் தவிர்த்து, ராமர் கோயில் விவகாரத்தைப் போல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.