புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக இடையே தொகுதிப்பங்கீடு குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோரும், திமுக சார்பில் மாநில அமைப்பாளர்கள் சிவா மற்றும் சிவக்குமாரும் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ”காங்கிரஸ்-திமுக கூட்டணியின் இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது திமுக கேட்ட தொகுதிகள், திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் பரிமாறப்பட்டன. தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு ஒரிரு நாட்களில் தெரியும்” என்றார்.