காஷ்மீர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள கண்டி பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்த பின்னர், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கூட்டு நடவடிக்கையின் போது, ரஜோரியில் உள்ள கண்டி வனப்பகுதியில், பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். காயமடைந்த பணியாளர்கள் உதம்பூர் கட்டளை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, அப்பகுதியில் பயங்கரவாதிகள் குழு சிக்கியுள்ளது'' எனத் தெரிவித்தார். மேலும், ''பயங்கரவாத குழுக்களில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் விவரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன'' என்றார்.
ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் வசிப்பவர்கள்.
அவர்கள், ஷகிர் மஜித் நஜார் மற்றும் ஹனான் அகமது சே என காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் இருவரும் இந்த ஆண்டு மார்ச் மாதம், பயங்கரவாத அமைப்பில் இணைந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். பாரமுல்லா மாவட்டத்தின் வனிகம் பயீன் க்ரீரி பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதை அடுத்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:KSRTC Woman Attacked: கேரள அரசு பேருந்தில் தமிழக பெண்ணுக்கு கத்திகுத்து.. கேரள இளைஞர் தற்கொலைக்கு முயற்சி!