தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2022, 6:30 PM IST

ETV Bharat / bharat

தனியார் மயமான மின்துறை - புதுச்சேரி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

புதுச்சேரியில், மின்துறை தனியார் மயத்துக்கு எதிராக மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.

மின்துறை தனியார் மயமாக்கபட்டதை எதிர்த்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
மின்துறை தனியார் மயமாக்கபட்டதை எதிர்த்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

புதுச்சேரி:இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி புதுச்சேரியில் மின்துறையை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து பல கட்ட போராட்டங்கள் நடந்தன. அனைத்து கட்சிகளும் போராட்ட களத்தில் இறங்கியதால் தனியார் மய நடவடிக்கை சில மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தை கடந்த பிப்ரவரியில் தொடங்கினர். தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கமாட்டோம் என்ற முதலமைச்சர் ரங்கசாமியின் வாக்குறுதி ஏற்று வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்றனர்.

இந்நிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் நேற்று (செப்.27) மாலை வெளியிடப்பட்டுள்ளது. மின்துறை டெண்டரில், "புதுச்சேரி அரசு மின்துறைக்கான ஏலத்துக்கு ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விநியோகத்தில் நூறு சத பங்குகளை வாங்க ஏலத்தாரர் தேர்வு செய்யப்படுவார்கள். முன்மொழிவுக்கான கோரிக்கைக்கு ஏலத்தாரர்கள் ரூ. 5.90 லட்சம் செலுத்தவேண்டும். வங்கி செக்யூரிட்டியாக ரூ. 27 கோடி இருக்கவேண்டும்.

முன்மொழிவுக்கான கோரிக்கை வரும் 30ஆம் தேதி தொடங்கும். விண்ணப்பிக்க வரும் நவம்பர் 25ஆம் தேதி இறுதிநாள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மின்துறை பொறியாளர் தொழிலாளர் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு கண்டனம் தெரிவித்து இன்று (செப்.28) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். மின்துறை தலைமை அலுவலகத்தில் அனைத்து பொறியாளர்களும், தொழிலாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர்.

இதனால் அலுவலகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. அனைத்து பிரிவுகளிலும் அலுவலர்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனிடையே மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மின்துறை தனியார் மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஊழியர்களை பல கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அவர்கள் வராததால் அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் மின்தடை ஏற்படாத அளவிற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஓய்வு பெற்றவர்களையும் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டவர்களை வைத்து பணிகள் நடக்கும். போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் மின்துறை அமைச்சர் கேட்டு கொண்டார். இந்த போராட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் உள்பட 2500க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதனால் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் இது குறித்து ஊழியர்கள் பேசும்போது, “புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு ஒரு போதும் நாங்கள் விடமாட்டோம், எங்கள் கோரிக்கையை அரசு பரிசினை செய்ய வேண்டும். எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தாமல் நேற்று டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

மின்துறை தனியார் மயமாக்கபட்டதை எதிர்த்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மின்துறை அமைச்சர் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். நாங்கள் கேட்பது மின்துறையை தனியார் மயமாக ஆக்கக்கூடாது என்றும், இதற்கு உடன்படாமல் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் எப்படி செல்வது என்றும், புதுச்சேரி முதலமைச்சரும் அமைச்சரும் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துங்கள். இது பொது மக்களுக்கு தெரியட்டும், எங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு நாங்கள் மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

இதையும் படிங்க: புதுவையில் முழு கடை அடைப்பு காரணமாக பேருந்துகள் நிறுத்தம் - பொதுமக்‍கள் கடும் அவதி!

ABOUT THE AUTHOR

...view details