புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காங்கிரஸ்-திமுக கூட்டணியும், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணியும் நேரடியாக மோதுகின்றன.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஜனநாயக சீர்திருத்த சங்கமும், தேசியத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் இணைந்து வேட்பாளர்களின் பின்னணி குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அதில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 323 வேட்பாளர்களின் பின்னணி ஆய்வு செய்யப்பட்டு அதன் முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குற்றப் பின்னணி
ஆய்வு செய்யப்பட்ட 232 வேட்பாளர்களில் 54 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளர் எண்ணிக்கை 2016இல் 30 ஆக இருந்த நிலையில் 2021இல் அது 28ஆக குறைந்துள்ளது.
அதிக குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள்
சராசரியாக அதிக குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களில் அதிமுகவினர் இடம் பிடித்துள்ளனர். அக்கட்சியில் ஐந்து வேட்பாளர்களில் மூவர் (60%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
அதற்கு அடுத்தபடியாக பாஜகவின் ஒன்பது வேட்பாளர்களில் ஐந்து (56%) பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
மூன்றாவதாக திமுகவின் 13 வேட்பாளர்களில் ஏழு (54%) பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளன.
இந்த மூன்று கட்சிகளை ஒப்பிடும்போது காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் சராசரி அளவில் குறைந்த குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.