ராஞ்சி (ஜார்கண்ட்): இந்தியாவில் முதன்முறையாக தேர்தல் பணிக்கு நியமிக்கப்படுவதற்கு முன் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் பயிற்சியில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையம் (EC) முடிவு செய்துள்ளது. இதனையடுத்து ஜூன் 23-ம் தேதி நடைபெற உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மந்தர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்த முறை அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளூர் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும். தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கூற்றுப்படி தேர்தல் அதிகாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தேர்வை அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தும். தேர்வின் போது, விண்ணப்பதாரர்கள் 25 கேள்விகளுக்கு அரை மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 15 கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் பயிற்சி பெற்று மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.