டெல்லி:இந்தியாவில் பல மாநிலங்களில் காலியாக உள்ள 7 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டு இடங்கள், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகியவற்றில் தலா ஒரு இடம் என தற்போது மொத்தம் ஏழு மாநிலங்களைவை இடங்கள் காலியாக உள்ளன.
ஏழு இடங்களுக்குத் தேர்தல்
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் அக்டோபர் 4ஆம் தேதியும், என். கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் அக்டோபர் 6ஆம் தேதியுடன் முடிவதால் அன்றைய தினம் புதுச்சேரியிலும் மாநிலங்களவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது.
இத்தேர்தலுக்கு வரும் செப்டம்பர் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 23ஆம் தேதி வேட்புமனு பரிசீலனைக்கு, 27ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஆகும்.
அக்டோபர் 7ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், அன்று மாலை 5 மணிக்கே வாக்குகள் எண்ணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அதிமுக எம்.பி ஏ. முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்ததால் ஒரு மாநிலங்களவை இடம் காலியானது. இதையடுத்து, அந்த இடத்திற்கு திமுக சார்பில் எம்.எம் அப்துல்லா கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி போட்டியின்றி தேர்வாகியிருந்தார்.
ஏன் தேர்தல்?
தமிழ்நாட்டில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களது எம்.பி பதவிகளை கடந்த மே மாதம் 7ஆம் தேதி ராஜினாமா செய்தனர். கே.பி. முனுசாமி வேப்பனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதியிலும், ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வென்று தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில், கே.பி. முன்னுசாமியின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதிவரை இருந்தது. ஆனால், ஆர். வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதிவரை தான் இருந்தது.
எனவே, இத்தேர்தலில் கே.பி. முன்னுசாமி இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் ஐந்தாண்டு கால பதவியையும், வைத்திலிங்கம் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் எட்டு மாத கால பதவியையும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் - முதலமைச்சர் அறிவிப்பு