மும்பை :தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவை தங்களுக்கு சொந்தம் என அஜித் பவார் தரப்பிலும், கட்சித் தாவலில் ஈடுபட்ட தலைவர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான சரத் பவார் தரப்பில் இருந்தும் மனுக்கள் வழங்கப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்.எல்.ஏக்களை திரட்டிக் கொண்டு மகாராஷ்டிராவை ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு அஜித் பவார் ஆதரவு அளித்தார். இதையடுத்து அவருக்கு துணை முதலமைச்சர் பதவியும், அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவையில் உறுப்பினர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மொத்தம் உள்ள 53 எம்.எல்.ஏ.க்களில், 40க்கும் மேற்பட்டோரின் ஆதரவு தங்கள் பக்கம் இருப்பதாகவும், தங்கள் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்றும் அஜித் பவார் தெரிவித்து உள்ளார். இதனிடையே அதிகபட்ச எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்கள் பக்கம் உள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அஜித் பவார் தரப்பு மனு வழங்கி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்யின் பெருவாரிய உறுப்பினர்கள் அஜித் பவாரை தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித் பவார் தரப்புக்கே வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
அதேநேரம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் பாட்டீல், கடந்த ஜூலை 2ஆம் தேதி கட்சித் தாவல் மூலம் ஆளும் சிவசேனா பாஜக அமைச்ரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட 9 கிளர்ச்சி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக மின்னஞ்சல் மூலம் கேவியட் மனுத் தாக்கல் செய்து உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை கட்சியின் செயல் தலைவராக நியமித்தது, பேரன் ரோகித் பவாருக்கு எம்.எல்.ஏ பதவி வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் கட்சியில் முக்கியத்துவத்தை இழந்ததாக அதிருப்தி அடைந்த அஜித் பவார் கடந்த ஜூலை 2ஆம் தேதி 30க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்களை திரட்டிக் கொண்டு மாநிலத்தை ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு அளித்தார்.
இதையும் படிங்க :Chhattisgarh: போலி பாராமெடிக்கல் கல்லூரிகள் வசூல் வேட்டை! 12 ஆயிரம் மாணவர்களின் வாழ்க்கை?