டெல்லி:சென்னையில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, உட்கட்சி அமைப்பு தேர்தல் மூலம் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக நேற்று(ஏப்.19) இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்பது குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்படாத நிலையில், தேர்தல் ஆணையம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததோடு, கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy) வசம் சென்றுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முக்கிய அம்சமாக கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக கையெழுத்திடும் நபருக்கு இரட்டை இலை சின்னம் வழங்கவும் அம்மாநில தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி நேற்று புலிகேசி நகர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்திருந்தார். தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பின் மூலம் அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கர்நாடக மாநில தேர்தலில் மூன்று தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில் அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!