டெல்லி:கர்நாடக மாநிலத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழலத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஆளும் பாஜக, பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸ், குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே 124 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் கட்சி அனல் பறக்கும் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த மாநிலம் என்பதால் எப்படியாவது தனது செல்வாக்கைக் கட்சியில் நிரூபிக்க வேண்டும் என கார்கே தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி வருகிறது. மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் போர்வாள் எனப் போற்றப்படும் டிகே சிவக்குமாரும் தனது பங்கிற்குத் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஆளும் பாஜக அரசுக்கு எதிராகத் தீவிர பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சியினர் விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, மதப்பிரச்சனை, அண்மையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டது உள்ளிட்டவற்றைப் பிரதானமாக முன்வைத்து வருகின்றனர். மறுமுனையில் ஆளுங்கட்சியான பாஜக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பாஜக ஆட்சியில் கர்நாடக மாநில வளர்ச்சி, ஐடி பூங்கா, சாலை மேம்பாடு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை முன்வைத்து பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.