டெல்லி:ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரசின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற 25ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என காங்கிரசும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பாஜகவும் கடுமையாக போட்டிப் போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள், பிரதமர் மோடியையும் பாஜக தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேப்போல் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக தலைவர்கள் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராஜஸ்தான் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது.
இந்நிலையில் நேற்று (நவ. 22) ராஜஸ்தானில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வயநாடு எம்பியும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பிரதமர் மோடியையும், அவர் தலைமையிலான பாஜக அரசையும் கடுமையாகத் விமர்சித்தார்.
பிக்பாக்கெட் அடிப்பவர்கள் தனியாக வருவதில்லை. அவர் குழுவாக தான் வருவார்கள். குழுவில் ஒருவர் முன்னே வந்து கவனத்தை திசை திருப்புவார், மற்றொரு நபர் பின்னால் இருந்து வந்து பிக்பாக்கெட் அடித்து விடுவார். அதுபோல மோடி தொலைக்காட்சியில் வந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். அதானி பின்னால் வந்து மக்கள் பணத்தை எடுத்துச் செல்கிறார். இடையில் யாரும் வராமல் பார்த்துக் கொள்ளும் நபர் தான் அமித் ஷா.
இடையில் யாராவது வந்தால் அவர்கள் மீது அமித் ஷா தடியடி நடத்துவார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், ராகுல் காந்தி உலகக்கோப்பையில் நமது அணி தோல்வி அடைந்ததற்கு அதிர்ஷ்டம் இல்லாத பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்தது தான் காரணம் எனவும் விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்தியில் பேச்சுக்கு பாஜகவினர் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர். மேலும் ராகுல் காந்தி மீதும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீதும் பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி விமர்சித்து பேசியதற்கு வருகின்ற 25ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் அளித்துள்ள நோட்டீஸில், "ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் பயட்டு என்னுமிடத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் குறித்து அறுவறுக்கத்தக்க வகையில் நீங்கள் பேசியதாக பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமரை, ஒரு தேசிய கட்சித் தலைவரை பிக்பாக்கெட்டு உடன் ஒப்பிட்டு துரதிர்ஷ்டமானவர் என குறிப்பிட்டதாகவும், கடந்த 9 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்ததாக உண்மையற்ற தகவல்களை கூறியதாக குற்றச்சாட்டு வந்துள்ளது.
அந்த குற்றச்சாட்டில் அவர்கள் R.P. சட்டத்தின் பிரிவு 123 (4), பிரிவு 171G, 504, 505 (2), மற்றும் IPC இன் 499 ஆகியவற்றை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே இந்த புகார் தொடர்பாக வருகின்ற நவம்பர் 25ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 55 முறை கத்தி குத்து, சிசிடிவி கேமரா முன் நடனம் - டெல்லியில் கொடூர கொலை