டோராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் வசித்துவரும் தமதி தேவி என்னும் 65 வயது மூதாட்டி, சிறுத்தையிடம் சிக்கிய மான் குட்டியை மல்லுகட்டி மீட்டுள்ளார். இவரது எதிர்ப்பை கண்ட பயந்த சிறுத்தை மான் குட்டியை விட்டுவிட்டு பயந்தோடியுள்ளது. இவரது மகத்தான தைரியத்தையும், கருணையையும் சாமோலி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்த சம்பவம் வான் கிராமத்தில் நேற்று (பிப். 6) நடந்துள்ளது. இதுகுறித்து தமதி தேவி கூறுகையில், எனது வீட்டிற்கு அருகே வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று மான் குட்டியை கவ்விச் செல்வதை கவனித்தேன். மான் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை அறிந்தேன். இதனால், கையில் கிடைத்த கட்டையை வைத்துக்கொண்டு சத்தமிட்டபடி சிறுத்தையை நோக்கி ஓடினேன்.
இதைக்கண்ட சிறுத்தை மான் குட்டியை விட்டுவிட்டு அங்கிருந்து பயந்தோடி வனப்பகுதிக்குள் மறைந்தது. இதையடுத்து காயம்பட்டிருந்த மான் குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து பால் கொடுத்தேன். அதன்பின், உள்ளூர் கால்நடை மருத்துவர் மணீஷ் குமார் பாண்டேவுக்கு தகவல் கொடுத்தேன்.