பதனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐய்யப்பா கோயிலில் இரண்டு மாத கால வருடாந்திர மண்டலம்-மகரவிளக்கு பருவ பூஜை நவம்பர் 16ஆம் தேதி தொடங்கும்.
இந்நிலையில் சபரிமலை கோயிலில் நேற்று (நவ. 14) நடந்த இறுதி ஏற்பாடுகளை மறுஆய்வு செய்ய நடந்த உயர் மட்ட அலுவலர்களின் கூட்டத்திற்குப் பிறகு, தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், “இந்த முழு புனித யாத்திரையும் இம்முறை மெய்நிகர் வரிசை முறையின் மூலமாகவே இருக்கும். எனவே வழக்கமான கடும் அவசரத்தைக் கட்டுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.
தற்போது கரோனா தொற்றுநோயை அடுத்து ஒரு சுமுகமான யாத்திரையை உறுதிசெய்ய அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து சுரேந்திரன் விவரித்தது பின்வருமாறு:
ஒவ்வொரு பக்தரும், சன்னதிக்கு வருகை தரும்போது 24 மணி நேரத்திற்குள் கோவிட் சான்றிதழை (நெகட்டிவ் ஆக இருந்தால் மட்டும்) எடுத்துச் செல்ல வேண்டும்.
மலையேற்றத்தைத் தொடங்குவதற்கு முன் பக்தர்கள் சோதனையை மேற்கொள்ள உதவும் வகையில், அடிப்படை முகாம்களான பம்பா மற்றும் நிலக்கல் பகுதிகளில் கோவிட்-19 சோதனை முகாம்கள் திறக்கப்படும்.
இது தவிர, திருவனந்தபுரம், திருவல்லா, செங்கண்ணூர், கோட்டயம் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட பல்வேறு மையங்களில் ஆன்டிஜென் பரிசோதனைகள் செய்ய சுகாதாரத் துறையால் ஏற்பாடுகள் செய்யப்படும்.