டெல்லி: 74-வது குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எகிப்து அதிபர் சிசி இந்தியா வந்துள்ளார். தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை எகிப்து அதிபர் சிசி சந்தித்தார். இரு தலைவர்களும் உலகளாவிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்தியா - எகிப்து இடையே இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தக் கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் ஒளிபரப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வழங்கும் வகையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து இந்திய - எகிப்து இடையே தூதரக ரீதியிலான நட்புறவு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
எகிப்து அதிபருடனான சந்திப்பில், கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போரால் உலகளவிலான உணவு விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் உள்ளிட்டவற்றுக்கு உதவக்கூடிய சைபர் இணையதளத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிராக இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் பணியாற்றவும், இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அதிகரிப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
எல்லை கடந்த பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க இரு நாடுகள் தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா, எகிப்து நாடுகள் இடையிலான வர்த்தகம் 12 பில்லியன் டாலரை எட்ட முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களை நாடு மறக்காது.." - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு