டெல்லி: 2022ஆம் ஆண்டுக்கான கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. முதல் 200 தரவரிசையில் மூன்று இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
இதில், மும்பை ஐஐடி 177ஆவது இடத்திலும், டெல்லி ஐஐடி 185ஆவது இடத்திலும், பெங்களூரு இந்திய அறிவியல் கழகம்(ஐஐஎஸ்சி) 186ஆவது இடத்தையும் பெற்று தரவரிசையில் இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், இந்த கல்வி நிறுவனங்களைப் பாராட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், "மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி,பெங்களூரு ஐஐஎஸ்சி ஆகிய நிறுவனங்களுக்கு வாழ்த்துகள்.
சர்வதேச உயர் கல்வி நிறுவன தரவரிசையில் மேலும் அதிக இந்திய கல்வி நிறுவனங்களை இடம்பெறச் செய்வதற்கும், இளைஞர்கள் மத்தியில் அறிவார்ந்த வலிமையை அதிகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன" எனக் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, தரவரிசையில் இடம்பிடித்த மூன்று நிறுவனங்களையும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.