ஹைதராபாத் (தெலங்கானா):கடந்த 2021 - 2022 நிதியாண்டில் டெல்லி அரசால் கொண்டு வரப்பட்ட கலால் கொள்கையில் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. அதிலும், சில மதுபான வர்த்தகர்களுக்கு உரிமம் அளித்தது மற்றுல் சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. ஆனால், இதனை டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாக மறுத்தது. மேலும், இந்த கொள்கை டெல்லி அரசால் கைவிடப்பட்டது.
அதேநேரம், சிபிஐ இது குறித்து விசாரிக்க வேண்டும் என டெல்லி துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து, இது தொடர்பாக பணப் பரிவர்த்தனை மோசடி பிரிவின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளும், பிஆர்எஸ் எம்எல்சியுமான கவிதாவின் கணக்காளராக கருதப்படும் புஜ்ஜிபாபு அளித்த வாக்குமூலத்தின்படி, கவிதா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிஷோடியா ஆகியோருக்கு இடையே அரசியல் புரிந்துணர்வு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள அமலாக்கத்துறை மூலம் தெலங்கானாவில் பின்புறம் வழியாக பாஜக நுழைய முயற்சிப்பதாக கவிதா கூறி இருந்தார். இந்த நிலையில், கவிதா மீது உள்ள பல்வேறு வழக்குகள் தொடர்பாக நாளை (செப் 15) நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில், நிஜாமாபாத்தில் வைத்து கவிதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.