டெல்லி:டெல்லியில் கடந்த 2021-22ஆம் ஆண்டு கலால் கொள்கையில் மாற்றங்களை செய்து, விதிகளை மீறி தனியார் மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியதாகவும், இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது பாஜகவினர் புகார் தெரிவித்தனர். இந்த வழக்கு பூதாகரமான நிலையில் கடந்த ஆண்டு புதிய கலால் கொள்கையை ரத்து செய்த ஆம் ஆத்மி அரசு, மீண்டும் பழைய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது.
இந்த வழக்கில் கலால் துறையை வைத்திருந்த டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். மத்திய பாஜக அரசு திட்டமிட்டு தங்களை அச்சுறுத்துவதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். சிபிஐ அவரை கைது செய்தது. சிபிஐ வழக்கில் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் சட்டவிரோதப் பணப்பறிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சிசோடியாவை கைது செய்தது. இதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கலால் கொள்கை ஊழல் விவகாரத்தில் மணீஷ் சிசோடியா 14 செல்போன்களில் சுமார் 43 சிம்கார்டுகளைப் பயன்படுத்தியதாகவும், அதன் பிறகு அந்த செல்போன்களை அழித்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட அந்த செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளின் உண்மையான உரிமையாளர்களை கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.