அவுரங்காபாத்: வீடில்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் வீடு கட்டும் திட்டம் (PM Awas Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2022ம் ஆண்டுக்குள் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வீடுகள் கட்டித்தரப்படுகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவுரங்காபாத் மாநகராட்சி துணை ஆணையர் அபர்ணா தியேட் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், "சமர்த் கன்ஸ்ட்க்ரசன், ஜாக்குவர் குளோபல் சர்வீசஸ், இந்தோ-ஐ குளோபல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகிய நிறுவனங்கள், பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்காக ஒரே கணினியில் டெண்டர் கோரியுள்ளன. இது மாநகராட்சியின் விதிகளுக்கு முற்றிலும் மாறானது. இது மாநகராட்சி நிர்வாகத்தை மோசடி செய்தது மட்டுமின்றி, அரசுக்கு பெரும் நிதியிழப்பை ஏற்படுத்தும் செயல் ஆகும்.
3 நிறுவனங்களின் நிதிப்பற்றாக்குறை காரணமாக பிரதமரின் வீடு கட்டும் திட்டம் செயல்டுத்தப்படவில்லை. 4 இடங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்ட 4 டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் 3 நிறுவனங்கள் இணைந்து ஒரு டெண்டரை கோரியது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.