திண்டுக்கல்:அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ் பாபு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இருந்து மருத்துவர் சுரேஷ் பாபுவை விடுவிக்க வேண்டுமானால், ரூபாய் 3 கோடி தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது ஆனால் சுரேஷ் பாபு, 3 கோடி ரூபாய் தர மறுத்ததால் கடைசியாக 51 லட்ச ரூபாய் கண்டிப்பாக தர வேண்டும் எனக் கூறி அங்கித் திவாரி மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து கடந்த நவம்பர் 1ஆம் தேதியன்று நத்தம் சாலையில், சுரேஷ் பாபு, 20 லட்சம் ரூபாய் பணத்தை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (நவ. 31) இரவு மீதித் தொகை 31 லட்சம் ரூபாயை அங்கித் திவாரி கேட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து மருத்துவர் சுரேஷ் பாபு, லஞ்ச ஒழிப்புத் துறையில் அலுவலகத்தில் புகார் அளித்ததால், போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மருத்துவரிடம் கொடுத்து அனுப்பினர். இதனை அடுத்து திண்டுக்கல் தோமையார்புரம் அருகே அமலாக்கத்துறை அதிகாரி காரில் மருத்துவர் சுரேஷ் பாபு பணத்தை வைத்து உள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த காரை எடுத்து அவர் செல்ல முயன்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிய போது, அவர் காரை நிறுத்தாமல் சென்று உள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விரட்டிச் சென்று திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கொடைரோட்டில் டோல்கேட்டிற்கு தகவல் தெரிவித்து அந்த காரை மடக்கி பிடித்தனர்.
இதன் பின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கைது செய்து, திண்டுக்கல் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து 20 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் தொடர்ந்து 12 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், அங்கித் திவாரி கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார் என்பதும், கடந்த ஏப்ரல் மாதம் 2023ஆம் ஆண்டு மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள மருத்துவர் சுரேஷ் பாபு கொடுத்த புகாரின் பேரில் அமலாக்க துறை அதிகாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!