கேரளா: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், நிதியமைச்சராக இருந்தவர் பேராசிரியரும் அரசியல்வாதியுமான தாமஸ் ஐசக். ஆட்சியிலிருந்த போது கேரளா உட்கட்டமைப்பு நிறுவனத்தின் (KIIFB) துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், நிதியமைச்சராகப் பதவி வகித்த வந்த காலத்தில் அன்னிய செலாவணி சட்டத்தை (FEMA)மீறி நிதி திரட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அமலாக்கத்துறை இவர் மீது வழக்குப்பதிவு செய்தது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தாமஸ் ஐசக்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து தாமஸ் ஐசக் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
தொடர்ந்து, அமலாக்கத்துறையின் விசாரணையைப் புறக்கணித்து வந்த தாமஸ் ஐசக், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "அமலாக்கத்துறை என் மீது முறையற்ற புகார்களை அடுக்கி வருகின்றது. சட்டத்தை மீறி எந்த ஊழல் செயலிலும் ஈடுபடவில்லை. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் படியே அனைத்தும் நடைபெற்றது.
கருப்புப் பணத்தின் புழக்கம் குறித்து சந்தேகம் இருந்தால் ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியா பணப்பரிமாற்றம் குறித்துச் சோதனையிட்டு நடவடிக்கை எடுக்கட்டும். அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் இந்த சோதனையில் ஈடுபட வேண்டும். ஆனால் ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை இப்படி முறையற்ற சோதனைகளில் ஈடுபடுவது சட்டத்தை மீறும் செயலாகும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.