டெல்லி: திமுக எம்.பியான ஆ.ராசா, கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் குருகிராமில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விதிகளை மீறி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதாகத் தெரிகிறது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்காக ஆ.ராசா பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த லஞ்சப்பணம், கடந்த 2007ஆம் ஆண்டு ஆ.ராசாவுடைய பினாமி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதைப் பயன்படுத்தி பினாமி நிறுவனத்தின் பெயரில், கோயம்புத்தூரில் 55 கோடி ரூபாய் மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை ஆ.ராசா வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கோவையில் உள்ள 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.