அஸ்ஸாம் மாநிலத்தில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், கரீம்கஞ்ச் பதார்கண்டி எம்எல்ஏ கிருஷ்னேந்து பால் வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வாக்குப்பதிவு முடிந்தபின், கரீம்கஞ்ச் ரத்னாரி தொகுதிக்குள்பட்ட எம்.வி. பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிச் செல்வதற்குத் தேர்தல் ஆணையம் சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாகனம் பாதி வழியில் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வாக்குப்பதிவு மையத்தின் பொறுப்பு அலுவலர் அவ்வழியே வந்த வாகனத்தில் லிஃப்ட் கேட்டுள்ளார். எந்தவொரு பாதுகாப்புமின்றி அந்த வாகனத்தில் இவிஎம் இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதில் ட்வீஸ்ட் அந்த வாகனம் பாஜக வேட்பாளர் கிருஷ்னேந்து பாலின் மனைவியின் கார் என்பது, தேர்தல் ஆணைய அலுவலர்களுக்குத் தெரியாது.
இது குறித்து காணொலி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதையடுத்து, அந்த வாகனத்தைச் சுற்றிவளைத்த சுமார் 50 பேர் கொண்ட கும்பல் கற்களை வீசி தாக்கத் தொடங்கியுள்ளனர். இதன்பிறகு, பாதுகாப்பு அலுவலர்களுக்குத் தேர்தல் ஆணைய அலுவலர்கள் தகவல் அளித்தனர். உடனடியாகச் சென்ற காவல் துறையும், பாதுகாப்புப் படையினரும், அந்தக் கும்பலை விரட்டியடித்தனர்.