பெங்களூரு:கர்நாடகாவின் குடகு மற்றும் தக்சின கன்னடா ஆகிய மாவட்டங்களின் இன்று (ஜூன் 28) காலை 7.45 மணியளவில் பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக, குடகு மாவட்டத்தில் உள்ள கரிகே, பெராஜே, பாகமண்டலா, மடிகேரி, நாபோக்லு மற்றும் தக்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள சம்பாஜே, கூனட்கா மற்றும் சுல்லியா அருகே உள்ள குட்டிகாரு ஆகிய இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை சுமார் 3 முதல் 7 வினாடிகள் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அப்போது மக்கள் பலரும் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதற்கு முன்னர் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், மூன்றாவது முறையாக இதை உணர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நில அதிர்வின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.