டெல்லி : இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் திங்கள்கிழமை (அக்.18) இஸ்ரேலிய பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான யேர் லாபிட்டைச் சந்தித்தார். இரு தலைவர்களும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
இது குறித்து ஜெய்சங்கர் ட்விட்டரில், “இஸ்ரேல் பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறைந அமைச்சர் யேர் லாபிட் (YairLapid) உடன் இன்று மிகவும் பயனுள்ள பேச்சு நடந்தது.
இரு தரப்பு உறவுகள்
இருவரும் பரந்த அளவிலான பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்” எனத் தெரிவித்திருந்தார். மற்றொரு ட்வீட்டில், “இஸ்ரேலுடன் அடுத்த மாதம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியா ஒப்புக்கொண்டது. கோவிட் தடுப்பூசி சான்றிதழை பரஸ்பரம் அங்கீகரிப்பது குறித்து இரு தரப்பினரும் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டனர்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, சர்வதேச சோலார் கூட்டணியின் புதிய உறுப்பினராக இஸ்ரேலை ஜெய்சங்கர் வரவேற்றார். இந்திய- இஸ்ரேல் நாடுகளின் இரு தரப்பு உறவுகளை மேலும் வளப்படுத்த ஒரு வரைபடத்தை தயார் செய்ய இஸ்ரேலின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை (அக்.17) ஐந்து நாள் பயணமாக இஸ்ரேலின் டெல் அவிவ் சென்றார். வெளிவிவகார அமைச்சராக ஜெய்சங்கர் இஸ்ரேல் நாட்டிற்கு வருவது இதுவே முதல் முறை.