அகமதாபாத் (குஜராத்): தன்னுடைய ராஜ்ய சபா எம்பி பதவிக்காலம் முடிவதையொட்டி நேற்றைய முன்தினம் குஜராத் வந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று (ஜூலை 10) குஜராத் காந்தி நகர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் ஆகஸ்ட் 18ஆம் தேதி முடிவடைகிறது. மேலும், குஜராத்தில் இருந்து மற்ற இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்களுடன், இரண்டாவது முறையாக அதே மாநிலத்தில் இருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், பாஜக மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் ஜெய்சங்கருடன் சட்டமன்ற வளாகத்திற்குச் சென்றனர். அங்கு ராஜ்ய சபா தேர்தல் அதிகாரியிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த ஜெய்சங்கர், பிரதமர் மோடிக்கும், பாஜக தலைமைக்கும், குஜராத் மக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தை ராஜ்யசபாவில் பிரதிநிதித்துவப்படுத்தியது தனக்கு கிடைத்த கெளரவம் என்றும், பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டில் நடக்கும் மாற்றத்தின் ஒரு பகுதியாக மாற இது வாய்ப்பளித்ததாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, ஜெய்சங்கரை அகமதாபாத் விமான நிலையத்தில் அமைச்சர் ராகவ்ஜி படேல், அகமதாபாத் மேயர் கிரிட் பர்மர் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் வரவேற்றனர். வருகிற 24ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், ஜெய்சங்கரின் வேட்புமனு உறுதியானது என்று கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.