பீமாடோலு :தண்டவாளத்தில் சிக்கி மேற்கொண்டு நகர முடியாமல் நின்ற பொலிரோ வாகனம் மீது டுரோன்டோ விரைவு ரயில் மோதியது. ரயில் மோதிய வேகத்தில் விபத்துக்குள்ளானது. தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்திற்கு டுரோன்டோ விரைவு ரயில் பயணம் மேற்கொண்டது.
அதிகாலை 3 மணி அளவில் டுரோன்டோ விரைவு ரயில், ஆந்திர பிரதேச மாநிலம் எலுரு மாவட்டத்தில் உள்ள பிமாடோலு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் நின்ற கார் மீது ரயில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு காரை இழுத்துச் சென்ற ரயில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் நொருங்கி அப்பளம் போல் உருக்குலைந்தது. விரைவு ரயிலின் முன் பகுதியும் கடும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், அதிர்ஷ்டவசமாக எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல் ரயில் அருகில் வருவதை கண்டு சரியான நேரத்தில் காரில் பயணித்தவர்களும் வெளியேறி உயிர் பிழைத்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். ரயில் வருவதற்கு முன் ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்த நிலையில் அதை முட்டி உடைத்து விட்டு கார் தண்டவாளத்திற்குள் புகுந்ததாகவும், மோதிய வேகத்தில் தண்டவாளத்திற்குள் பாய்ந்த கார் மேற்கொண்டு நகர முடியாமல் சிக்கிக் கொண்டதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.