டெல்லி: G20 மாநாட்டிற்காக இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லி போக்குவரத்து சிறப்பு காவல் ஆணையர் சுரேந்தர் யாதவ் இன்று (செப்.4) தெரிவித்தது படி உச்சநீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் தவிர டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் செயல்படும். மேலும் தலைமை பாதுகாப்பு ஆணையரிடம் இருந்து டிசிபி மெட்ரோவிற்கு அனுப்பிய கடிதத்தின் படி பாதுகாப்பு சம்மந்தமாக சில மெட்ரோ ரயில் நிலையங்களின் கதவுகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி போக்குவரத்து சிறப்பு காவல் ஆணையர் சுரேந்தர் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, சுப்ரீம் கோர்ட் மெட்ரோ சேவைகள் மட்டும் நிறுத்தி வைக்கப்படும் மற்ற அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் சேவைகள் தொடர்ந்து செயல்படும் பாதுகாப்பு விதிகளின் படி சில மெட்ரோ நிலையங்களின் நுழைவாயில் மற்றும் வெளியேறு இடத்தில் கதவுகள் 15 முதல் 20 நிமிடங்கள் மூடப்படும். ஆனால், மெட்ரோ ரயில் சேவைகள் தொடர்ந்து நடைபெறும். பாதுகாப்பு துறை அதிகாரிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட், ஜன்பத், பிகாஜி காமா பிளேஸ், கான் மார்க்கெட் மற்றும் தௌலா குவான் மெட்ரோ நிலையங்கள் பதட்டமான நிலையம் என கண்டறியப்பட்டு இந்த மெட்ரோ நிலையங்களின் கதவுகள் அடைக்கப்படுவதற்கு கடிதம் அனுப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் டெல்லி போக்குவரத்து சிறப்பு காவல் ஆணையர் சுரேந்தர் யாதவ் டெல்லியில் பேருந்து இயக்கங்கள் பற்றி தெரிவிக்கும் போது, ISBT பேருந்துகள் செப்டம்பர் 8ஆம் தேதி காலை 5 மணி முதல் செயல்படும். ஆனால், குருகிராம் வழியான சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது அந்த வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் இஃப்கோ சௌக்கில் இருந்து எம்ஜி சாலையை நோக்கி திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து மெஹ்ராலி செல்லும். மேலும் கூட்டம் நடக்கக்கூடிய கட்டுப்பாட்டு பகுதியில் பேருந்து வசதிகள் இருக்காது. டெல்லி போக்குவரத்து பேருந்துகளும் (DTC) ஒருங்கிணைத்து தடை செய்யப்பட்ட பகுதியை தவிர கடைசி வழி தடம் வரை மக்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.