நுபாடா (ஒடிசா): ஒடிசா மாநிலத்தின் நுபாடா மாவட்டத்தில் காரியார் சாலை ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில், நேற்று (ஜூன் 8) இரவு துர்க் - புரி விரைவு ரயில் வந்தது. அப்போது ரயிலில் இருந்த ஏசி பெட்டியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை உணர்ந்த பயணிகள், உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே பணியாளர்கள் தீ அணைப்பான்களை வைத்து தீயை அணைத்துள்ளனர்.
மேலும், இது குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே தரப்பில், “நேற்று இரவு சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவின் புரி ரயில் நிலையம் நோக்கி துர்க் - புரி விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஒடிசாவின் காரியார் சாலை ரயில் நிலையத்துக்கு நேற்று இரவு 10.10 மணிக்கு வந்தது.
ரயில் நின்ற சில நிமிடங்களில், ரயிலில் இருந்த பி3 என்ற ஏசி பெட்டியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை அறிந்த பயணிகள், உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்த தீ அணைப்பான்களைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது.
பிரேக் பேடுகளில் ஏற்பட்ட உராய்வால் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர், பிரேக் பேடில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இதில் எந்த வித சேதமும் ஏற்படவில்லை. அதேநேரம், ரயில்வே பொறியியல் துறையினர், பழுதடைந்த பிரேக் பேடை சரி செய்தனர். இதனையடுத்து, 1 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அடுத்து, ரயில் இரவு 11 மணிக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.