ஹைதராபாத்: கனடாவின் கல்வியாண்டு தொடக்கத்தில் விமான டிக்கெட் விலையேற்றத்துடன் காணப்படும், ஆனால் தற்போது கல்வி ஆண்டு தொடங்கிய பின்னரும் விமான டிக்கெட் விலை குறையாமல் உச்சத்திலேயே காணப்படுவதாக டிராவல் ஏஜெண்டுகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் இருந்து கனடாவின் எந்த நகரத்திற்குச் செல்ல வேண்டுமானாலும் விமான டிக்கெட் விலை அதிகமாக காணப்படுகிறது. சாதாரணமான விமான கட்டணத்தை விட தற்போது நூறு விழுக்காடு அதிகமாகக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியா - கனடா இடையே நிலவும் பதட்டமான சூழ்நிலையின் காரணமாக இந்த விமான டிக்கெட்டுகளின் விலை அதிகமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
பொதுவாக செப்டம்பர் கடைசி வாரத்தில் கனடாவின் பல்வேறு நகரங்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கும். அதற்கு முன்னதாக மாணவர்கள் அங்கு செல்ல வேண்டும் என்பதால் செப்டம்பர் மாத தொடக்கத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்து காணப்படும். சாதாரண நாள்களில் ஹைதராபாத்தில் இருந்து துபாய் வழியாக கனடாவுக்குச் செல்வதற்கான டிக்கெட்டின் விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை இருக்கும்.
அதுவே, கல்வியாண்டின் தொடக்கத்தில் இதன் விலை ரூ.1.10 லட்சம் வரை இருக்கும். செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து டிக்கெட் விலை மீண்டும் குறைந்து விடும். ஆனால், தற்போது நிலை அப்படி இல்லை என ஹைதராபாத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்ட்கள் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் தெரிவித்தனர். தற்போது, ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட் விலை ரூ.1.35 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை உள்ளதாகவும், இதே போல் பதற்றமான சூழல் நிலையினால் டிக்கெட் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.