கேரளா: ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வர். கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வர். இந்த நிலையில் மண்டல மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு, கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆனால், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. இதனால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, பக்தர்களின் வாகனங்கள் பம்பைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பக்தர்களின் வாகனங்களை பம்பைக்குச் செல்ல அனுமதிக்க கோரி, நேற்று இரவு (டிச.12) எருமேலியில் ஐயப்ப பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.