டெல்லி:நடப்பாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை இரு அமர்வுகளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுவதாக இருந்தது.
இருப்பினும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாளில் இருந்தே நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. அதானி குறித்து ஹிண்டர்ன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடியது முதல் இரு அவைகளிலும் இது தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இரு அவைகளும் தொடர்ந்து 4-வது நாளாக முடங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று அவை கூடியதும், அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.