டெல்லி:நாடு முழுவதும் கடந்த ஜூலை 21-ம் தேதி நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் முர்மு, தனது போட்டியாளரான யஷ்வந்த் சின்ஹாவை எதிர்த்து வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். மேலும் நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் என்கிற சாதனையும் பெற்றுள்ளார். இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
முர்மு 6 லட்சத்து 76 ஆயிரத்து 803 வாக்குகள் மதிப்புகள் உடைய 2 ஆயிரத்து 824 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா 3 லட்சத்து 80 ஆயிரத்து 177 வாக்குகள் மதிப்புள்ள ஆயிரத்து 877 வாக்குகள் பெற்றார். ஜூலை 18 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 4,809 எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
ராஜ்யசபாவின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் 2022-க்கான தேர்தல் அதிகாரியுமான பி.சி. மோடி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவிடம் சான்றிதழை வழங்கினார். மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் முர்முவை தலைநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.