டெல்லி:பழம்பெரும் தெலுங்கு நடிகர் நந்தாமுரி டரகரா ராமா ராவ் என்ற என்டிஆர் (NTR)-இன் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை ஒட்டி, மத்திய அரசு சார்பில் அவரைக் கவுரவிக்கும் பொருட்டு, என்டிஆர் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு என்டிஆர் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.
இதனையடுத்து நிகழ்வில் உரையாற்றிய திரெளபதி முர்மு, “இந்திய சினிமாவில் நந்தமுரி டரகரா ராமா ராவ் (NTR) மிகவும் தனித்துவம் வாய்ந்தவர். என்டிஆர் ஏற்று நடித்த கிருஷ்ணா மற்றும் ராமர் ஆகிய கடவுள்களின் கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவர் சமூக நீதிக்காக உழைத்தவர். என்டிஆரின் தனித்துவமான ஆளுமையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்” என தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய என்டிஆரின் மகளும், ஆந்திர பாஜகவின் தலைவருமான புரண்டேஸ்வரி பேசுகையில், “பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கினார் ,என்டிஆர். ஆந்திராவின் திருப்பதியில் உள்ள பெண்கள் பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தினார். என்டிஆர், ஒரு தலைமுறைக்கான நடிகர் மட்டுமல்ல. அனைத்து தலைமுறைகளுக்கும் ஒரு தனித்துவமான நடிகராக விளங்குகிறார். அவர் சினிமா மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் தனி முத்திரை பதித்தவர்” என கூறினார்.