உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி என்ற மாவட்டத்தில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே சுரங்கம் அமைக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனிடையே, கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று, காலை சுமார் 9 மணியளவில் அந்த சுரங்கப் பணியில் தீடீரென சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து, அந்த சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 40 தொழிலாளர்கள் சுரங்க இடர்பாடுகளுக்குள் சிக்கியதாக தகவல் வெளியானது. பின்னர் அந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் விரைந்து சென்று, மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்தனர். முதற்கட்டமாக சுரங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களிடம் இணைப்பை ஏற்படுத்தி, அவர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், சுரங்கத்தின் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் மூலம் ஆக்சிஜன் மற்றும் அவர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இன்றுடன் அந்த 40 தொழிலாளர்களும் இடர்பாடுகளுக்குள் சிக்கி 6 நாட்கள் நிறைவடைந்துவிட்டது.
அந்த சுரங்கப்பாதையானது சுமார் நான்கரை கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்டிருந்த நிலையில், சரிவானது 35 மீட்டருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தொழிலாளர்களை மீட்கும் பணியானது தீவிரமடைந்த நிலையில், நேற்று மீட்புப் பணியின்போது விரிசல் ஏற்பட்டதாகவும், மேலும் முயற்சித்தால் விரிசல்கள் அதிகரிப்பதாகவும் மீட்புப்படை அதிகாரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், அதிநவீன இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, மீட்புப் பணியானது நடந்து வந்தது. அதனைத் தொடர்ந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆகர் இயந்திரம் பாறையில் மோதியதால் செயல்படாமல் நின்றது. பின்னர், மதிய வேளைக்குப் பிறகு இயந்திரம் மீண்டும் வேலை செய்யத் துவங்கியது.
இருப்பினும், இந்தூரில் இருந்து மற்றொரு கனரக துளையிடும் இயந்திரம் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த மீட்புப் பணியில், தற்போது வரை சுமார் 25 மீட்டர் மட்டுமே நிறைவடைந்துள்ளது. தற்போது திடீரென மீட்புப்பணி மற்றும் நிவாரணப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மீட்புப் பணியானது தடைபட்ட சம்பவம் அனைவரின் மத்தியிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சுரங்கப்பாதை தயாரிக்கும் NHIDCL நிறுவனத்தின் இயக்குநர் அன்ஷு மனீஷ் குல்கோ தெரிவித்ததாவது, "தற்போது சுரங்கப்பாதை தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இயந்திரம் பழுதானதால் துளையிடும் பணி நிறுத்தப்பட்டதா எனக் கேட்டதற்கு, இயந்திரத்தில் எவ்வித கோளாறும் இல்லை" என தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்தூரிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனுக்குத் தேவையான இயந்திரங்களை ஏற்றுவதற்காக C-17 என்ற சரக்கு விமானத்தை இந்திய விமானப்படை அனுப்பியுள்ளது.
இது குறித்து இந்திய விமானப்படை X சமூக வலைத்தளப் பக்கத்தில், "உத்தரகாண்டில் நடந்து வரும் மீட்புப் பணிக்கு உதவுவதற்காக இந்திய விமானப்படை (IAF) தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தூரில் இருந்து டேராடூனுக்கு சுமார் 22 டன் முக்கிய இயந்தியரங்களை விமானத்தில் கொண்டு செல்ல IAF C-17 தயாராக நிறுத்தப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளது.
மேலும், மீட்புப் பணி நடக்கும் இடத்தில் முக்கிய உபகரணங்கள் விரைந்து கிடைக்க, இந்திய விமானப்படை அதிவிரைவாக செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சுரங்கப் பாதையில் இருந்து தொழிலாளர்கள் தப்பிப்பதற்காக சுரங்கப்பாதை மீட்புக் குழு 800 மி.மீ மற்றும் 900 மி.மீ விட்டம் கொண்ட குழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க: முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் தோல்வி.. கரும்பு விவசாயிகளின் போராட்டம் தொடரும் - விவசாயிகள் அறிவிப்பு!