டிகாலா (இந்தோனேசியா): இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவில் 1 மில்லியன் ட்ரோஜன் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ட்ரோஜன் இன மக்களின் ’மநெநெ’ சடங்கை இங்குவரும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். இறந்து போன தங்கள் முன்னோர்களின் ஆன்மாவை மகிழ்விப்பதற்காக இந்த மக்கள் இறந்த உடலுக்கு புத்தாடை அணிவிப்பது, அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுப்பது போன்றவைகளை செய்கின்றனர்.
சுலவெசி தீவில் உள்ள இரண்டு சிறிய நகரங்களில், ’மநெநெ’ சடங்கு கொண்டாடப்படுகிறது. இந்த சடங்கின் ஒரு பகுதியாக டோரியா கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சடலங்களை வெளியே எடுத்து ஆடை அணிவித்து அலங்கரித்து அவர்களுக்கு பிடித்த விசயங்கள் செய்யப்படுகிறது. இதுகுறித்து சுல்லே டோசே கூறியதாவது "நாங்கள் மாநெநெ வைச் செய்யும்போது, கல்லறை அறையைத் திறந்து அதையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் சுத்தம் செய்வோம். பின்னர், ஆடைகளை மாற்றுவதற்கு முன், உடல்களை சூரிய ஒளியில் உலர்த்துவோம்," என்று கூறினார்.
தங்கள் விருப்பப்படும் உறவினர்களை அழைத்து விமர்சையாக திருமணம் செய்வதற்கு நமது பெற்றோர்கள் பல ஆண்டுகளாக பணம் சேர்த்து வைப்பது வழக்கம். அது போல் இந்த சுலவெசி தீவில் வசிக்கும் ட்ரோஜன் மக்கள் தங்கள் முனோர்களுக்கு தங்கள் பாரம்பரிய வழக்கப்படி விமரிசையாக இறுதிசடங்கு செய்ய போதிய பணம் இல்லாத பட்சத்தில் தேவையான பணம் சேர்க்கும் வரை அதற்கென பிரத்யேகமாக உள்ள மலை பாறை கல்லறைகளில் வைத்து பின் மநெநெ சடங்கில் அவர்களுக்கு மரியாதை செய்கின்றனர்.
முன்னோர்களின் பாதுகாக்கப்பட்ட உடல்களை வைத்திருக்கும் சவப்பெட்டிகள் மலைப்பகுதியில் இதற்கென பிரத்யேகமாக செதுக்கப்பட்ட புதைகுழியில் இருந்து வெளியே எடுக்கப்படுகின்றன. " இறந்தவர்களுக்காக அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் செய்யும் இந்த சடங்குமுறைகள் அவர்கள் நன்றியின் அடையாளமாகும். அவர்கள் தங்கள் முன்னோர்களின் ஆவிகளை மதிக்கிறார்கள். இதனால் முன்னோர்கள் இவர்களின் பாதுகாப்பான, அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆசிர்வதிக்கிறார்கள் என நம்புகின்றனர்," என்று டோரியா கிராமத்தின் தலைவர் ரஹ்மான் பாதுஸ் கூறினார்.
ஒரு குடும்பம் புதிதாக கல்லறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட தங்கள் உறவினருக்கு ஒரு சிகரெட்டை வழங்கியது. மற்றொரு குடும்பம் உறவினர் உடலுக்கு ஒரு ஸ்டைலான சன்கிளாஸ் பொருத்தியது. இந்த சடங்கிற்காக பிரத்யேகமாக இருக்கும் கல்லறையில் இருந்து எடுக்கப்படும் பெரும்பாலான உடல்கள் மம்மிகள் போலவே உள்ளன. சில உடல்கள் எலும்புக்கூடுகளாக சிதைந்து போயுள்ளன.