அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வருகின்ற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்திலும் புவியியல், கலாசார வேறுபாட்டை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
புவியியல், கலாசார வேறுபாட்டை குறைக்க முயற்சி - பிரதமர் மோடி - வளர்ச்சி பணி அஸ்ஸாம் பிரதமர் மோடி
டெல்லி: ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்திலும் புவியியல், கலாசார வேறுபாட்டை குறைக்க மத்திய மற்றும் அஸ்ஸாம் மாநில அரசும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் துப்ரி, மேகாலயாவில் ஃபுல்பாரிவுக்கு இடையே பாலத்தை திறந்து வைத்து பேசிய அவர், "சாலை வழியே, அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களுக்கிடையே 250 கிமீ தூரம் உள்ளது. வரும் காலங்களில், அது 19-20 கிமீ ஆக குறையும். மற்ற நாடுகளுக்கிடையே போக்குவரத்தை மேற்கொள்வதில் இப்பாலம் முக்கியத்துவம் பெறும்" என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, "இப்பாலத்தின் மூலம் மேற்கவங்கத்திலிருந்து அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களுக்கு நேரடி தொடர்பு வழி அமைக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம் செராம்பூரிலிருந்து துப்ரி செல்வதற்கான 55 கிமீ நீளமுள்ள சாலை கட்டுமான பணிகள் அக்டோபரில் தொடங்கும். பூடான், வங்கதேசம் செல்வதற்கான நேரத்தையும் தூரத்தையும் இப்பாலம் குறைக்கும்" என்றார்.