டெல்லி: இந்தியா தலைமை தாங்கி வரும் ஜி20 மாநாடு, டெல்லி பிரகதி மைதானத்தில் வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதற்காக உலகத் தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். இதற்காக டெல்லியில் பலத்த பாதுகாப்பும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, டெல்லி விமான நிலையம் மத்திய அரசின் தேர்ந்த மூத்த அதிகாரிகளால் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவையுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் எந்தவொரு சூழலிலும் இடையூறையோ அல்லது வசதி குறைவாகவோ உள்ளது என்பதை உணராத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், அமைச்சர்கள் தங்களது அதிகாரப்பூர்வ வாகனங்களை அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்திவிட்டு, சட்டில் சேவை (Shuttle Service) வாகனங்களில் மட்டுமே பாரத் மண்டபம் மற்றும் இதர கூட்டங்களில் நடைபெறும் இடத்திற்குச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
ஜி20 மாநாட்டிற்காகவே மத்திய அரசால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிற ஜி20 இந்தியா (G20 India app) மொபைல் செயலியை அனைத்து அமைச்சர்களும் தரவிறக்கம் செய்வது மட்டுமல்லாமல், அதன் மூலம் உலகத் தலைவர்களின் உரையாடல்களை சிறந்த மொழிபெயர்ப்புடன் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்து உள்ளார்.