மேற்கு வங்கம்: உத்தர் தினஜ்பூர் மாவட்டம் களியகஞ்ச் தொகுதியின் பாஜக வேட்பாளர் சௌமன் ராய்க்கு எதிராக அவரது மனைவி ஷர்பரி சிங்கா ராய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து தெரிவிக்க பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஷர்பரி சிங்கா, வேலை வாங்கித்தருவதாக பொய் சொல்லி என் கணவர் மக்களிடம் காசு வாங்குகிறார். புதிதாக ஒரு குடும்பம் ஆரம்பிக்க என்னையும், என் மகளையும் ஒதுக்கிவிட்டார். அவருக்கு மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம், தலைவனாக இருக்க தகுதியற்றவர் என் கணவர்.
களியகஞ்ச் தொகுதியில் இவரை நிறுத்த வேண்டாம் என மத்திய, மாநில பாஜக தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அவர்கள் செவி சாய்ப்பதாக தெரியவில்லை. எனவே மக்களிடம் கோரிக்கை வைக்கிறேன், என் கணவருக்கு வாக்களிக்காதீர்கள். நான் வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவள் இல்லை. ஆனால், நான் என் கணவருக்கு எதிராக பரப்புரை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.
சர்ச்சைக்கு பேர் போனவர் சௌமன் ராய், அவரை களியகஞ்ச் தொகுதியில் நிறுத்துவதற்கு பாஜக தரப்பில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
தலைவனாக தகுதியற்றவர் என் கணவர் - பாஜக வேட்பாளரின் மனைவி புகார்!