மும்பை: தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவின் மஹிம் நகரைச் சேர்ந்த சரிகா ஷாஹு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு தனித்துவமான முறையில் சாக்லேட் பட்டாசுகளை உருவாக்கியுள்ளார்.
தீபாவளி என்றதுமே புத்தாடைகளும், இனிப்பு உள்ளிட்ட தின்பண்டங்களும், விதவிதமான பட்டாசுகளும் நம் நினைவுக்கு வரும். ஆண்டுதோறும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் புதுப்புது ரகங்களில் வெடிகள், மத்தாப்புகள் அறிமுகமாகின்றன.
அந்தவகையில், மும்பையைச் சேர்ந்த சரிகா ஷாஹூ என்ற பெண்மணி சத்தமில்லாமல் சுவைத்து சாப்பிடும் இனிப்பு வெடிகளை தயாரித்துள்ளார். சாப்பிடும் வகையில் உருவாகியுள்ள இனிப்பு பட்டாசுகளுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பசுமை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உருவாகியுள்ள இனிப்பு பட்டாசுகள் பார்க்க அச்சு அசலாக பட்டாசு போலவே காட்சியளிக்கிறது. அணுகுண்டு, சங்கு சக்கரம், லட்சுமி வெடி, ராக்கெட் வெடி, புஷ்வானம் உள்ளிட்ட பலவகையான வகையில் உருவாகியுள்ள சாக்லேட் பட்டாசுகள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.