சென்னை: நேற்று ஒரேநாளில் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்த நிலையில், புதுச்சேரியின் ஆளும் நாராயணசாமி அரசுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுவரை ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்த நிலையில், யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் நாராயணசாமியின் காங்கிரஸ் அரசை, இன்று (பிப்ரவரி 22) அதன் பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆளும் காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று மதியம் ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன், அதனைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதி திமுக உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால், ஆளும் கட்சிக்கு 12 சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் ஆதரவாக இருப்பார்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் இருப்பதால், ஆளும் கட்சி கவிழும் நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 15 பேர் இருந்தால் போதும் என்ற நிலையில், ஆளும் அரசு தவித்துவருகிறது.
இது பற்றி ஆளும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே, அதிமுகவின் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்.ஆர். காங்கிரசுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டிருந்ததை, ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளோம்.
இந்த நிலையில், சபாநாயகர் இந்த இரண்டு உறுப்பினர்களையும் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் நீக்கி உத்தரவிடுவார். எனவே, காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்கும்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதற்கிடையே, தேசிய கட்சியான பாஜக, ஆளும் கட்சியைக் கலைக்க பல யுக்திகளைக் கையில் எடுத்துவருகிறது. இது புதுச்சேரியில் பாஜக தனது தடத்தைப் பதிக்க எடுத்துவரும் முயற்சியாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், பாஜகவின் சார்பில், மூன்று நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர்.