இந்தியப் பரப்பில், 33 விழுக்காடு இருந்த காடுகள், தற்போது 22 விழுக்காடாக குறைந்துள்ளது. குறைந்துள்ள வனவளத்தை மீண்டும் பெற நாடு முழுவதும், 54 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன. மரங்கள் குறைவதால் புவி வெப்பம் அதிகரிப்பதால் மழைப்பொழிவு குறைந்து, தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கோவையைப் பொறுத்தவரை, சாலை விரிவாக்கம் மேம்பாலப் பணி உள்ளிட்ட காரணங்களுக்காக மரம் வெட்டப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவை - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கத்தின்போது, மேட்டுப்பாளையம் சாலையில் மட்டும் சுமார் ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த மரங்களை வெட்டியதால், அவற்றில் தங்கியிருந்த பல பறவையினங்கள் காணாமல் போயின. குறிப்பாக பழந்தின்னி வௌவால், குயில் மற்றும் பல அரிய பறவையினங்கள் வெளியேறின.
மேட்டுப்பாளையம் சாலை மட்டுமல்லாது, அவிநாசி சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் வெட்டப்பட்டது. மரங்களை வெட்டியது சாலை விரிவாக்கத்திற்காக என ஊரக வளர்ச்சித்துறையும் நெடுஞ்சாலைத்துறையும் தெரிவித்தது. ஆனால், இன்றுவரை சாலை விரிவடையவே இல்லை. மேலும் அவிநாசி சாலையில் இப்போதும் அதே போக்குவரத்து நெரிசலுடன் தான் உள்ளது. அது போல பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை, தடாகம் சாலை, தொண்டாமுத்தூர் சாலை, திருச்சி சாலை என கோவை நகரின் சுவாசமாக இருந்த சாலைகளில், மரங்களை எல்லாம் நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையினர் வெட்டியுள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் கோவை நகரப்பகுதிக்குள் மட்டும் 5,000 மரங்களுக்கு மேல் வெட்டப்பட்டுள்ளது. ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அத்தகைய விதிமுறைகளை நெடுஞ்சாலைத்துறையினர், இதுவரை பின்பற்றவில்லை என சமூக ஆர்வலரும் மதிமுக இளைஞர் அணிச் செயலாளருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து மரங்களை வெட்டி வருகிறது. வெட்டிய மரங்களுக்கு ஈடாக புதிய மரங்கள் நடுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அக்கறை செலுத்தாத காரணத்தால், கோவையில் இன்றைக்கு மரங்களின் அடர்த்தி வெகுவாக குறைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, நெடுஞ்சாலைத்துறை எவ்வளவு மரங்கள் வெட்டி உள்ளது என்ற தகவலை வாங்கி, வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக மரங்கள் நடப்படவில்லை என்பதை வெளிக்கொண்டு வந்து, நெடுஞ்சாலைத்துறை வெட்டிய ஆயிரத்து 500 மரங்களுக்குப் பதிலாக 15 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.