கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாடு முழுவதும் குறைந்து வருகிறது. இருப்பினும், அதன் இரண்டாவது அலை தொடங்கிவிடுமோ என சுகாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, நேற்று(நவ.14) தீபாவளி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள சர் சாயாஜிராவ் பொது மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் மருத்துவர்கள் கொண்டாடினர். இதுகுறித்து மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பேலிம் கூறுகையில், "கரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நிலை தேறி உள்ளவர்களுடன் தீபாவளி கொண்டாடினோம்.
இருள் சூழ்ந்த அறையில் விளக்குகளை ஏற்றி, கரோனா சூழலிலிருந்து விடுபட இறைவனிடம் வழிபாடு மேற்கொண்டோம்" என்றார். இது குறித்து மருத்துவர் வைஷாலி கூறுகையில், "பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தீபாவளியை கொண்டாடினோம். பெருந்தொற்று காலத்தில் இருளைப் போக்கும் விளக்குகளைப்போல், கரோனா முன் களப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நோயாளிகள் தங்களது குடும்பத்தினர் உடன் இல்லாததை உணரக் கூடாது என்பதற்காக தீபாவளி கொண்டாடினோம்" என்றார். மருத்துவமனை நிர்வாகத்தின் முயற்சியால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், "நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் குடும்பம் இன்றி தவித்த போதிலும் மற்றொரு குடும்பம் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளேன்" என்றார்.